
தொண்டையின் உட்புறத்தில், இரண்டு பக்கங்களிலும் இயற்கையாக அமைந்திருக்கும் சுரப்பிகளாகிய டான்சில்ஸ் என்பதைத்தான், எல்லோரும் தொண்டையில் சதை வளர்கிறது என்று சொல்வதுண்டு.
டான்சில் சுரப்பிகள் நோய் எதிர்ப்பு வேலையைப் பார்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக் கிருமிகள் நமது உடலுக்குள் நாம் உண்ணும் உணவுடன் சேர்ந்து நுழையும்போது, இந்த டான்சில் சுரப்பிகள் தான் அந்தக் கிருமிகளை நம் உடலுக்குள் போய் நோயை உண்டுபண்ணவிடாமல் தடுக்கிறது, எதிர்க்கிறது, அழிக்கிறது.
இவ்வாறு கிருமிகளைக் கண்டுபிடித்து எதிர்க்கும்போது முதலில் டான்சில் சுரப்பிகள் தான் அந்த நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படுகின்றன.
டான்சில் சுரப்பிகள் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் தொண்டைவலி, அடுத்து எச்சில் கூட விழுங்க முடியாத நிலை, வாயை நன்றாக திறக்க முடியாத நிலை, காய்ச்சல், தலைவலி, கன்னம் மற்றும் காதில் வலி, இருமல், உணவை விழுங்கும் போது வலி என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வந்து ஆளைப் படுக்க வைத்துவிடும்.
பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத் தான் அடிக்கடி இந்த டான்சிலைட்டிஸ் என்கிற டான்சில் பாதிப்பு நோய் வருகிறது. டார்ச் லைட் வெளிச்சத்தில் தொண்டையின் உள் பகுதியைப் பார்த்தாலே, இரண்டு பக்கமும் நன்றாக வீங்கி, சிவந்து, சில நேரங்களில் டான்சில் சுரப்பிகளின் மேற்பகுதியில் சீழ் பிடித்துக்கூட காணப்படும். டான்சில் சுரப்பி வீக்கத்துக்கு சிகிச்சை, மருந்து மாத்திரைகளா அல்லது அறுவை சிகிச்சையா என்று எக்கச்சக்க குழப்பம் ஏகப்பட்ட பேருக்கு உண்டு.
வாட்ச்மேன்
டான்சில் சுரப்பிகள் நமது உடலுக்கு ஒரு நல்ல வாட்ச்மேன். எனவே நமது ஆயுள் முழுக்க டான்சில் சுரப்பிகள் இருப்பது நமது உடலுக்கு நல்லது. ஆனால், டான்சில் நோய்வாய்ப்பட்டு, வீங்கியிருக்கும்போது, அந்த நேரத்தில் மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் இதுபோக தினமும் வெந்நீரில் கல் உப்பைப் போட்டுக் கொப்பளிப்பது போன்றவைகளை செய்து வந்தால், வீக்கம் குறைந்து நோயும் குணமாகிவிடும். ஆனால், டான்சில் பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால், அதாவது வருடத்தில் ஒரு முறை அல்லது இருமுறை ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சையிலேயே சரிசெய்து கொள்ளலாம். வருடத்திற்கு நான்கைந்து முறை தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் , அதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
குளிர்ச்சியான உணவுப்பொருட்கள், குளிர்ச்சியான பானங்கள், ஐஸ்கிரீம் , ப்ரிட்ஜ்ஜில் உள்ள உணவுப் பொருட்கள், அசுத்தமான உணவுப் பொருட்கள், கெட்டுப்போன உணவுப் பொருட்கள் போன்றவற்றை குழந்தைகள் அடிக்கடி உட்கொள்ளும்போது தான் டான்சிலைட்டிஸ் நோய் வருகிறது. எனவே, மேற்சொன்ன உணவுப்பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.