நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்

3 months ago 23

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணி மற்றும் பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியதால், இன்று காலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியில் 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதி வாரியாகவும் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பறக்கிங்கால் பகுதியில் கழிவு நீரேற்று நிலையமும், வலம்புரிவிளையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், பால்பண்ணை சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு பிரதான குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பால் பண்ணை சந்திப்பு முதல் டெரிக் சந்திப்பு வரை ஒரு பகுதியாகவும், டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை ஒரு பகுதியாகவும் பணிகள் நடந்து முடிந்தன. பின்னர், கலெக்டர் அலுவலக ரவுண்டானாவில் இருந்து செட்டிக்குளம் வரை குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியது. பிரதான சாலை என்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது செட்டிக்குளம் சந்திப்பு வரை குழாய் பதிக்க தோண்டப்பட்டுள்ளது. இதனால் செட்டிக்குளம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு ள்ளது. செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலக சாலைக்கு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் கலெக்டர் அலுவலக ரவுண்டானா சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலையில், செட்டிக்குளம் பணிமனையில் இருந்து, வடசேரி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய அரசு பஸ், திடீரென செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் திரும்பியது. அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பஸ் சிக்கியது. ஏற்கனவே மழை பெய்திருந்ததால், பஸ்சை வெளியே எடுக்க முடியாத வகையில் சிக்கி கொண்டது.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து டிராபிக் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பஸ் மீட்கப்பட்டது. இதற்கிடையே இன்று காலை வாரத்தின் முதல் நாள் என்பதால், காலையில் இருந்தே அதிகளவில் வாகனங்கள் வந்தன. செட்டிக்குளம் சந்திப்பில் செய்யப்பட்டு இருந்த போக்குவரத்து மாற்றத்தால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி வாகனங்களும் சிக்கி திணறின. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிக்குளம் வழியாக செல்ல வேண்டிய வாகனங்களும், செட்டிக்குளத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும் எதிரெதிரே செல்ல முடியாமல் சிக்கி திணறின. நீண்ட நேரம் இந்த போக்குவரத்து நெரிசல் இருந்தது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் விக்ரகமும் பவனியாக சென்றதால், நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

 

The post நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article