நாகரிக கோமாளிகள்

2 months ago 9

சமீப காலமாக நாளிதழ்களில் அதிகமாக இடம் பிடிப்பது பாலியல் குற்ற செய்திகள் தான். கேரளா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டும் குற்றங்கள் குறையவில்லை. மாறாக அதிகரித்து தான் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இணையதளத்தில் சரளமாக புழங்கும் ஆபாச படங்கள். மேலும் ரீல்ஸ் என்ற போர்வையில் இணையத்தில் வந்து விழும் ஆபாச வீடியோக்கள்.

செல்போனை அனைத்து வயதினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள், மாணவிகள் முகநூலில் நுழைந்தவுடனே இந்த ஆபாச வீடியோக்களை தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகிறது. பாலியல் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள். பாலியல் குற்றங்களில் வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வழி தவறி செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. ஆழ்மனதின் வன்மத்தை தூண்டும் வகையில் இணையதள வீடியோக்கள் மற்றும் விவாதங்கள் அமைந்து இருக்கின்றன. இதனால் உறவு முறையே சீரழிந்துவிட்டது.

ஆண், பெண் நண்பர்களாக பழகுவது என்பதே சாத்தியமில்லை என்ற நிலைக்கு வன்மத்தை இந்த வீடியோக்கள் வளர்க்கின்றன. ‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை ஒரு சிலர் தேடிச்சென்று தான் பார்த்து வந்தனர். அதற்கே சென்சார் இருக்கிறது. ஆனால் வீட்டுக்குள் நுழைந்து அனைவரையும் கெடுக்கும் இணையதள வீடியோக்களுக்கு சென்சாரே கிடையாது. வருங்கால சந்ததியினரின் மீது அக்கறை கொண்டு இந்த சீர்கேட்டை மிக அவசரமாக அணுகி தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

மாணவர்கள், மாணவிகள் இளமையில் வழிதவறி தங்கள் எதிர்காலத்தை வீணடித்துக்கொள்ளும் வக்கிர விஷயங்களை இணையதளத்தில் சென்சார் செய்யும் நடைமுறையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாடம் சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்கள் மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்து சீரழிப்பது போன்ற சம்பவங்களின் பின்னணியே முகநூல், ரீல்ஸ் போன்றவற்றில் வரும் ஆபாச வீடியோக்கள் தான். தமிழக அரசும் பள்ளி நிர்வாகங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து தனி மனித ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது.

தொழில்நுட்பத்தினால் அதிக பயன்பெறுகிறோம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் நமக்கே தெரியாமல் சமூக சீரழிவை ஏற்படுத்தி வருவதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் புண் புரையோடிப்போகும். சிற்றின்ப வேட்கையால் எத்தனை தற்கொலைகள், எத்தனை கொலைகள். மனிதனை மனிதானாக்கும் நல்ல விஷயங்கள் தற்போது மிக மிக அவசியமாகிவிட்டது. பணம், வசதி தேடி சிலர் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் விஷயங்களுக்கு அடிமையாகி சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒருவகை மனநோய். இதை குணப்படுத்த சட்டத்தை பிரயோகப்படுத்தினால் மட்டும் போதாது. நாகரிக கோமாளிகள் மீது பாரபட்சமின்றி எடுக்கப்படும் நடவடிக்கை தான் இதற்கு தீர்வாக அமையும்.

The post நாகரிக கோமாளிகள் appeared first on Dinakaran.

Read Entire Article