நாகப்பட்டினம், பிப்.6: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த (சீ.ம) மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எவ்வித வருமான வரம்பு நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் < https://umis.tn.gov.in > என்ற இணையதளம் மூலம் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைந்த அலுவலரை அணுகி < https://umis.tn.gov.in > என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிசி, எம்பிசி, சீர்மரபினர் மாணவர்கள் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.