நாகப்பட்டினம், மார்ச் 25: நாகப்பட்டினத்தில் நடந்த மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு பீச் வாலிபால் அணியும், பெண்கள் பிரிவில் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவு போலீஸ் அணியும் வெற்றி பெற்றது. பீச் வாலிபால் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பீச் வாலிபால் போட்டிகள் கடந்த 15ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் போட்டிகள் நடந்தது.
பொதுப்பிரிவினர், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் காவல்துறை வீரர்கள் என 75 அணிகள் பங்கேற்றது. நேற்று முன்தினம்(23ம் தேதி) இறுதி போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு பீச் வாலிபால் கிளப் அணியுடன், நம்பியார் நகர் பீச் வாலிபால் கிளப் அணி மோதியது. இரண்டு அணிகளும் தலா ஒரு செட் வெற்றி பெற்றிருந்த நிலையில் இறுதி தீர்மான செட்டில் தமிழ்நாடு பீச் வாலிபால் அணி 15 க்கு 11 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை போல் பெண்களுக்கான இறுதி போட்டியில் அக்கரைப்பேட்டை செந்தில்குமார் பீச் வாலிபால் கிளப் அணியை நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவு போலீஸ் அணி 21/15 மற்றும் 21/7 என புள்ளிகள் பெற்று நேர்செட்டில் வெற்றி பெற்றது. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு கலெக்டர் ஆகாஷ் பரிசு, பதக்கம் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கினார்.
The post நாகப்பட்டினத்தில் 75 அணிகள் கலந்து கொண்ட பீச் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி appeared first on Dinakaran.