நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

1 month ago 8

ஜெருசலேம்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உளவு பிரிவின் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் ஹஷேம் சபேதீன் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. லெபனான் மீது அக்.2ம் தேதி முதல் தரைவழித்தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்துள்ளது. மேலும் இஸ்ரேல் விமானப்படையும் சரமாரி குண்டுமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியான லெபனானை, சிரியாவுடன் இணைக்கும் ஒரு பிரதான நெடுஞ்சாலையை இஸ்ரேல் விமானப்படை குண்டு வைத்து தகர்த்தது. நேற்று முன்தினம் இரவு பெய்ரூட் புறநகர் பகுதியான தாஹியேவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உளவு பிரிவு அலுவலகத்தை இஸ்ரேல் விமானம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கட்டிடத்தின் சுரங்க அறையில் இருந்த ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் ஹஷேம் சபேதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொல்லப்பட்டனர். ஹஷேம் சபேதீன் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளதாக சவுதி பத்திரிகை அல் ஹடத் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்த இஸ்ரேல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சமூக வலைதளமான எக்ஸ் தள பக்கத்தில் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹஷேம் சபேதீன் ஆகியோரின் படங்களை பகிர்ந்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியை குறிப்பிட்டு உங்களுடைய பினாமிகளை எடுத்து கொண்டு லெபனானை விட்டு வெளியேறுங்கள் என்று பதிவிட்டுள்ளார். கடந்த மாதம் ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்பின் புதிய தலைவராக ஹஷேம் சபேதீன் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தளங்களை குறிவைத்து நேற்று ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா குழுவின் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் ஆயுத சேமிப்பு கிடங்குகள் அழிக்கப்பட்டன. மேலும் இஸ்ரேலிய எல்லையை நெருங்க ஹிஸ்புல்லா பயன்படுத்திய சுரங்கப்பாதையும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலின் போது 9 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர. நேற்று அதிகாலை இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இதே போல் வடக்கு லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அதிகாரி சயீத் அட்டல்லா அலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். லெபனானில் உள்ள பெத்தாவி அகதிகள் முகாம் மீது நேற்று இஸ்ரேல் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஹமாஸின் ஆயுதப்படை அதிகாரியான சயீத் அட்டாலா அலி வீடு தகர்க்கப்பட்டது. இதில் சயீத் அட்டாலா அலியின் மனைவி ஷைமா அஸ்ஸாம் மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் ஜெய்னாப் மற்றும் பாத்திமா ஆகியோரும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, மத்திய கிழக்குப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

The post நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article