மதுராந்தகம்: வைக்கோல் ஏற்றிச்சென்றபோது மின் கம்பியில் உரசியதில் மினி லாரி தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த மாத்தூர் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள், விளைநிலங்களில் நெற்பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை சீசன் களைகட்டியுள்ளது. இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட பிறகு மாட்டு தீவனத்திற்காக வைகோல்களை உருளையாக கட்டி வியாபாரிகள் விலைக்கு வாங்கி லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனர்.
இதுபோல் நேற்று மாலை லாரியில் வைக்கோல் ஏற்றப்பட்டு திம்மாவரத்துக்கு புறப்பட்டது. முனியதாங்கல் கிராம பகுதியில் வந்தபோது மின்கம்பியில் மினி லாரி உரசியதில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு வைக்கோல் கட்டுகள் எரிய தொடங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயற்சி செய்தார். அந்த பகுதியில் காற்று வீசியதால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.
தீ விபத்து குறித்து மேல்மருவத்தூர் காவல்துறை மற்றும் அச்சரப்பாக்கம் தீயணைப்பு துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் வைகோல் கட்டுகள், மனி லாரி முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. கிராம பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் இதுபோன்ற விபத்து அடிக்கடி நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.
The post வைக்கோல் ஏற்றிச்சென்றபோது மின் கம்பியில் உரசியதில் மினி லாரி தீ பிடித்து எரிந்தது: மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.