நவீன மீன் அங்காடி, ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

16 hours ago 5

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (7.5.2025) சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் 2.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியினையும், டாக்டர் பெசன்ட் சாலையில் 2.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரின் மீன் விற்பனையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவதால் சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில் நவீன மீன் அங்காடி சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதி ஆகியவற்றின் கீழ் 2.92 கோடி ரூபாய் மதிப்பில் 82 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கட்டடமானது, புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு, மீன் கழிவுநீரினை பயோ டைஜிஸ்ட்க்கு கொண்டு செல்லும் தனி வடிகால் மற்றும் வாகன நிறுத்தம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையக் கட்டடமானது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 1.05 கோடி ரூபாய், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ் அவர்களின் மேம்பாட்டு நிதி 50 இலட்சம் ரூபாய், கனிமொழி என்.வி.என்.சோமு அவர்களின் மேம்பாட்டு நிதி 49 இலட்சம் ரூபாய் என மொத்தம் 2.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,800 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது.

தரைத்தளம் பிரிவு-1ல், 30 நபர்கள் பயன்பெறும் வகையில் தையல் மற்றும் ஆரி வேலைப்பாடுகளுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. தரைத்தளம் பிரிவு-2ல், 30 நபர்கள் பயன்பெறும் வகையில் அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளது.

முதல் தளம் பிரிவு-3ல், 30 நபர்கள் பயன்பெறும் வகையில் கணினி மற்றும் டேலி (Computer and Tally) பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தளம் பிரிவு-4ல், பட்டம் பெற்று வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கான தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் இலவசமாக செயல்படவுள்ளது. இந்த மையத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி எவ்வித நேர்முகத் தேர்வையும் எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டடத்தினை திறந்து வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதையும், கணினி பயிற்சி வகுப்புகள், பெண்களுக்கு அழகுக்கலை, தையல் பயிற்சி, துணிகளில் கலைத்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டு அவர்களுடன் பயிற்சி குறித்து உரையாடினார்.

இந்நிகழ்ச்சிகளில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என். சோமு, துணை மேயர் மு.மகேஷ்குமார், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.மதன்மோகன், பி.ஶ்ரீராமுலு, மாமன்ற ஆளுங்கட்சித் துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ், மாமன்ற உறுப்பினர் ரா.ஜெகதீசன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையாளர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, (பணிகள்), கட்டா ரவி தேஜா, (வடக்கு வட்டாரம்), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்திய வட்டாரம்) மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நவீன மீன் அங்காடி, ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article