புதுடெல்லி,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.