
புதுடெல்லி,
இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது.
இந்தநிலையில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
மேலும் பீரங்கி தாக்குதலையும் அதிகரித்தது. அதேநேரம் பாகிஸ்தான், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த டிரோனை இந்தியா அழித்தது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் இருளில் மூழ்கின. மேலும் இந்த மாநிலங்களில் தொடர்ந்து அபாய ஒலி எழுப்பப்பட்டதால், பல இடங்களில் சைரன் ஒலிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இந்த சூழலில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் தனது எக்ஸ் வலைதளத்தில், "நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரசின் காசா கான்ட் மீது பல எதிரி ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் பறந்து செல்வது காணப்பட்டது.
சட்ட விரோதமான ஆளில்லா விமானங்கள் உடனடியாக நமது வான் பாதுகாப்புப் பிரிவுகளால் ஈடுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய ராணுவம் எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும்" என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "நான் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியதாக கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களை இந்தியா பொறுப்புடன் மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றி உள்ளது.
பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான். முன்னதாக இன்று காலை இந்த தீவிரமான மற்றும் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் மீண்டும் நிகழும் காட்சியை நாங்கள் கண்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. அது இந்தியாவின் ராணுவ தளங்களைத் தாக்க டிரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி உள்ளது...
இந்தியா பல ஆபத்துகளை தாக்கியது. ஆனால் பாகிஸ்தான் 26 க்கும் மேற்பட்ட இடங்களில் வான் வழியாக ஊடுருவ முயன்றது, மேலும் உதம்பூர், பூஜ், பதான்கோட், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் உள்ள நமது உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை சேதப்படுத்தியது.
அதிகாலை 1:40 மணிக்கு பஞ்சாபின் விமான தளத்தை குறிவைக்க அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. அவர்கள் சுகாதார வசதிகள் மற்றும் பள்ளிகளையும் கூட தாக்கினர்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், "விரைவான மற்றும் துல்லியமான பதிலடியாக, இந்திய ஆயுதப்படைகள் அடையாளம் காணப்பட்ட ராணுவ இலக்குகளில் மட்டுமே தாக்குதலை நடத்தின... இந்திய S-400 அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமானநிலையங்களை அழித்ததாகவும் கூறி, பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தை செயல்படுத்த முயன்றது... பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.