உளுந்தூர்பேட்டை, ஜன. 31: உளுந்தூர்பேட்டை நகராட்சி டிவிஎன் ரோடு பகுதியில் பூட்டியிருந்த ஒரு கடை நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற லைன்மேன் முருகன் தலைமையிலான மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அருகிலுள்ள கடைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின் விபத்து ஏற்படாமல் தடுத்தனர். பின்னர் 10க்கும் மேற்பட்டவர்கள் கடையை திறந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தினால் கடையின் உள்ளே இருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் மற்றும் மரப் பொருட்கள் எரிந்து தீயில் கருகியது. மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் பூட்டியிருந்த கடையின் உள்ளே தீப்பிடித்து எரிந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
The post நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த கடை appeared first on Dinakaran.