நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார் மதுரை ஆதீனம் மீது கலெக்டரிடம் புகார்: மே 19ல் மடத்தை முற்றுகையிடவும் முடிவு

9 hours ago 1

மதுரை: சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவதாக மதுரை ஆதீனத்திற்கு எதிராக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் காரில் சென்றார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே தனது கார் மீது மற்றொரு காரை மோதி, இஸ்லாமியர்கள் தன்னை கொலை செய்ய முயன்றதாக ஆதீனம் கூறியிருந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை, உளுந்தூர்பேட்டை போலீசார் ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் கூறியது பொய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது கார் டிரைவர் செல்வக்குமார் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மத மோதலை தூண்டும் வகையில், பொய்யான தகவலை வெளியிட்ட மதுரை ஆதீனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞ வாஞ்சிநாதன் தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதுரை கலெக்டர் சங்கீதாவை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘‘மதவெறியைத் தூண்டி சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருகிறார், மதுரை ஆதீனத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், இந்து சமய அறநிலையத்துறை மதுரை ஆதீனத்தை அப்பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும். மதுரை ஆதீனம் மடத்தில் அவருடன் உள்ள ஆதரவாளர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மதுரை ஆதீனம் மற்றும் அவரது கூட்டாளிகளை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வக்கீல் வாஞ்சிநாதன் கூறுகையில், ‘‘மதுரை ஆதீனத்தை கைது செய்து ஆதீன பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 19ம் தேதி மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம். இதன்பிறகு முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்’’ என்றார்.

 

The post நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார் மதுரை ஆதீனம் மீது கலெக்டரிடம் புகார்: மே 19ல் மடத்தை முற்றுகையிடவும் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article