பெரம்பூர்: சென்னை வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் கோயிலில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கோயில் குளத்தை திறந்துவைத்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, ஆர்.டி.சேகர் எம்எல்ஏ உள்பட பலர் இருந்தனர். இதையடுத்து ஐ.சி.எப் கமல விநாயகர் கோயில் பாலாலயம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமையான இரவீஸ்வரர் திருக்கோயில் லிப்டிங் செய்யப்பட்டு வருகிறது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் குடமுழுக்கு நடைபெறும். அந்த கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் இன்று புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் 220 கோயில்களில் திருக்குளங்கள் 120 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. ரூ.427 கோடி செலவில் 274 கோயில்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு நடைபெற்ற தைப்பூசத்தின்போது அறுபடை கோயில்களில் முறையான ஏற்பாடு செய்யவில்லை தமிழகத்தில் இருக்கும் துறைகளில் இந்து சமய அறநிலையத்துறை தான் உதவாக்கரை துறையாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரோ என்று கேள்விக்கு, ‘’தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளை எடுத்துக்கொண்டால் ஒன்றுக்கும் உதவாத தினம் தோறும் பொய்களையே அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கும் ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலைதான். தைப்பூசம் தினத்தன்று அதிக அளவில் மக்கள் கூடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால் போதிய வசதிகளை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தைப்பூச தினத்தன்று தமிழ்நாட்டில் எந்த கோயில்களிலும் சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை. மூச்சுத் திணறல்கள் கூட ஏற்படவில்லை. ஒழுங்காக நிம்மதியாக ஆன்மீக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்மீகத்தில் தலையிட்டு அரசியலாக்க நினைக்கும் அண்ணாமலையின் கபட நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை அண்ணாமலையின் கனவு பகல் கனவாகத்தான் முடியும்.
வடக்கில் நடக்கும் சம்பவங்கள் அண்ணாமலைக்கு கண்ணுக்குத் தெரியாது. காதுக்கு கேட்காது.தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அண்ணாமலை எப்படி ஊதி பெரிதாக்கி இருப்பார். அண்ணாமலையின் எண்ணங்கள் முழுவதும் களங்கப்பட்டுள்ளது. கள்ளஎண்ணம் என்பதால் அண்ணாமலையின் எண்ணத்திற்கு அரசு செய்து வரும் செயல்கள் தெரியாது. விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத அரசு மத்திய அரசு. ஜனநாயகத்தில் பத்திரிக்கை துறை என்பது நான்கு தூண்களில் ஒன்று. ஆகவே எதிர்மறையான கருத்துக்களை ஏற்கக்கூடிய அரசு என்றால் அது திராவிட மாடல் அரசாகத்தான் இருக்க முடியும். முருகருக்கு அதிக முக்கியத்துவம் தருகிற ஆட்சி என்பதால்தான் அனைத்து உலக முருகர் மாநாடு நடத்தப்பட்டது. நீ வேலை கையிலே எடுத்துக்கொண்டு நடந்து வந்தாலும் சரி, வேலை எடுத்து ஓடி வந்தாலும் சரி, வேலை கையில் எடுத்து உருண்டு வந்தாலும் சரி, அண்ணாமலை போன்றோர் போலியாக காவடிகளை சுமந்து சென்றாலும் சரி முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாடு முதல்வரின் கரத்தை தான் தமிழக மக்கள் பலப்படுத்துவார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை அண்ணாமலையின் காவடி, கபட நாடகம் தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு எச்சரிக்கை appeared first on Dinakaran.