
விண்ட்ஹோக்,
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றுள்ளார். நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார்.
பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி, வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு குதூகலமாக பிரதமர் மோடி மேளம் கொட்டி மகிழ்ந்தார். நமீபியா அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மோடி நடத்த உள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடி நமீபியா நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதாவது:-
இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் இடையிலான உள்ள நட்புக்கு இது ஒரு சாட்சி, இன்று அதனுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.இந்த மரியாதையை நமீபியா மற்றும் இந்திய மக்களுக்கும், அவர்களின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும், எங்கள் உடைக்க முடியாத நட்புக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஒரு உண்மையான நண்பர் கடினமான காலங்களில் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறார். இந்தியாவும் நமீபியாவும் தங்கள் சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருகின்றன. இந்த நட்பு அரசியலில் இருந்து பிறந்ததல்ல, போராட்டம், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையிலிருந்து பிறந்தது. எதிர்காலத்திலும், வளர்ச்சிப் பாதையில் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு முன்னேறிச் செல்வோம்.
உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் நமீபியாவும், இந்தியாவில் மிகப்பெரிய வைர மெருகூட்டல் தொழில் உள்ளது. அதுவும் எனது சொந்த மாநிலமான குஜராத்தில். வரும் காலங்களில் இரு நாடுகளிடையே உள்ள நிந்த நட்பு இந்த வைரங்களைப் போலவே பிரகாசிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.