திருத்தணி, ஜூலை 8: திருத்தணி மலைக்கோயிலில், முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பெரும்பாலான பக்தர்கள் முருகனுக்கு மலர்மாலை அணிவித்து தரிசனம் செய்ய விரும்புகின்றனர். கடந்த காலங்களில் மலைக்கோயிலில் மலர்மாலை, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு திருக்கோயில் அலுவலகத்தில் நேரடி முறையில் பொது ஏலம் நடைபெற்று, வியாபாரிகள் கடைகளுக்கு உரிமம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு மலைக்கோயிலில் உள்ள அன்னதானக்கூடம் விரிவுபடுத்த ஏதுவாக பூஜை பொருட்கள், மலர்மாலை கடைகளை திருக்கோயில் நிர்வாகம் காலி செய்து புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதனால், பூஜை பொருட்கள் கடைகள் மற்றும் மலர்மாலை கடைகள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டதால், பக்தர்கள் பூஜை பொருட்கள் மற்றும் மலர்மாலை வாங்கிச் சென்று சாமிக்கு பூஜைகள் செய்ய முடியாத நிலையில் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்து அறநிலையத்துறை திருத்தணி முருகன் கோயில் சார்பில் எம்எஸ்டிசி நிறுவனம் மூலம் இன்று ஆன்லைன் பொது ஏலம் கோரப்படுகிறது. பகல் 12.30 முதல் மாலை 5 மணி வரை ஆன்லைன் டெண்டர் நடைபெற உள்ளது. இதில், வியாபாரிகள் ஆர்வத்துடன் பங்கேற்று அதிக தொகைக்கு மலர்மாலை, பூஜை பொருட்கள் கடைகளுக்கு உரிமையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கடும் போட்டி நிலவுகிறது.
The post திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் உரிமை கோர இன்று ஆன்லைன் டெண்டர் appeared first on Dinakaran.