நன்னெறி கல்வியை கற்பிப்பதற்கான அறிவுரைகள்!

3 weeks ago 6

உலகப்பொதுமறை திருக்குறள் கற்பித்தல் மூலம் மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டும் விதமாக நன்னெறி கல்விப் பாடத்திட்டத்தில் கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழகம் உலகிற்கு தந்த பெருங்கொடையாகவும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையாகவும் உள்ள திருக்குறள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநூலில் இன்றியமையாத இடத்தினைப் பெற்று செவ்வனே கற்பிக்கப்படுகிறது . அரசாணையின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களை உள்ளடக்கி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நன்னெறிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அறிவுக்கருவூலமான திருக்குறளை வாழ்வியல் நெறியாக மாணவர் பின்பற்றும் பொருட்டு பள்ளிகளில் தகைசால் தனிச்சிறப்புடன் நன்னெறிக்கல்வியினை புகட்டுவதற்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

1. நன்னெறி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறுவதை ஆய்வு அலுவலர்கள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்தவும். பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு ஆய்வுக்கூட்டங்களில் நன்னெறிக் கல்வியின் நீடித்த பயன் தரும் விளைவினையும் விளக்கிட வேண்டும்.

2. ஓர் திருக்குறளை நாள்தோறும் காலை வணக்கக் கூட்டத்தில் பொருளுடன் மாணவர்கள் கூற வேண்டும்.

3. தமிழ்இலக்கிய மன்ற கூட்டங்களில் திருக்குறள் சார்ந்த கதை, கவிதை, நாடகம், வினாடி வினா ஆகியவற்றை திட்டமிட்டு பள்ளி அளவில் செயல்படுத்திட வேண்டும்.

4. பள்ளி அளவில் 100 குறட்பாக்களுக்கு அதிகமாக ஒப்புவிக்கும் மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து உரிய பரிசு தொகை ரூ.200 வழங்கி பாராட்ட வேண்டும்.

5. திருக்குறள் முற்றோதல் நிகழ்வுக்கு ஆர்வமாக உள்ள மாணவர்களை கண்டறிந்து பள்ளி அளவில் ஊக்குவித்து சிறப்புப் பயிற்சிகள் வழங்கி போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும்.

6. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை அன்று காலை வணக்கக் கூட்டத்தில் திருக்குறள் கருத்து பரிமாற்றம் சார்ந்து பேச்சு/கவிதை /சுவரொட்டி /நாடகம்/பாட்டு/கதைகள் இடம் பெறலாம்.

மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி அனைத்து மாணவர்களும் திருக்குறள் வழியிலான வாழ்வியல் நெறிகளை பின்பற்ற உரிய வழிகாட்டுதல்களை பள்ளி அளவில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும். மேற்கண்ட செயல்பாடுகளை அனைத்து வகை பள்ளிகளிலும் நடைபெறுதலை உறுதி செய்திட தேவையான நடவடிக்கையினை எடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post நன்னெறி கல்வியை கற்பிப்பதற்கான அறிவுரைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article