*பக்தர்கள் வருகை அதிகரிப்பால் காணிக்கை உயர்வு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.3.45 கோடியை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மாதந்தோறும் காணிக்கை உயர்ந்து வருகிறது.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுகிறது.
அதன்படி, ஜனவரி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது.
கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் நேரடியாக பார்க்கும் வசதியாக திருக்கோயில் வலைதளத்தில் (யூடியூப்) ஒளிபரப்பப்பட்டது.
அப்போது, கோயில் உண்டியலில் ரூ.3 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரத்து 797ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 112 கிராம் தங்கம், 1.96 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் 1.50 லட்சம் பக்தர்களும் கோயிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே, சமீபகாலமாக வழக்கத்தைவிட உண்டியல் காணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அதன்படி, இந்த மாதம் உண்டியல் காணிக்கை ₹3 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கை ₹3.45 கோடி appeared first on Dinakaran.