'நந்தன்' திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் - அண்ணாமலை

3 weeks ago 7

சென்னை,

'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் 'நந்தன்' என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. ஓ.டி.டி.யில் வெளியான பிறகு நந்தன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளனர். 

இந்தநிலையில் நந்தன் படத்தை பாராட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஓ.டி.டி தளத்தில் 'நந்தன்' திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.

தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் இரா சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த 'நந்தன்' திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

OTT தளத்தில் 'நந்தன்' திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின…

— K.Annamalai (@annamalai_k) October 19, 2024
Read Entire Article