நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தபோது பரிதாபம்; திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை பலி: குவாரியில் குளித்தபோது நீரில் மூழ்கினார்

4 hours ago 2


திருமலை: நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தபோது குவாரியில் குளித்த புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கோட்னபில்லியை சேர்ந்தவர் சீதாராவ்-பைடி தல்லிம்மா தம்பதியினர் மகன் ஜெகதீஷ் (24). அதே கிராமத்தை சேர்ந்தவர் முசாலிமைனரூ மகள் உமா (20). ெஜகதீஷ்-உமா திருமணம் கடந்த 8ம் தேதி நடந்தது. திருமணத்திற்கு மறுநாள் அன்னவரத்தில் உள்ள சத்யதேவர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்று இரவு அனைவரும் வீடு திரும்பினர். இதையடுத்து, ஜெகதீஷ், தனது நண்பர்களுக்கு விருந்து கொடுக்க விரும்பினார். இதற்காக கடந்த 10ம் தேதி மதியம் தனது நண்பர்கள் 5 பேருடன் கோட்னபில்லிக்கு அருகிலுள்ள ஒரு குவாரிக்கு சென்றார். அங்கு எல்லோரும் மது அருந்தினர்.

பின்னர் ஜெகதீஷ், தனது உடைகள், திருமணத்தின்போது அவரது மாமியார் பரிசளித்த தங்கச்செயின், மோதிரங்களை கழற்றி வைத்துவிட்டு குவாரியில் குளித்துள்ளார். சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியிருந்த குவாரியில் ஜெகதீஷ் நீச்சலடிக்க குதித்துள்ளார். ஆனால் போதையில் இருந்த இவரது நண்பர்கள் இதை கவனிக்காத நிலையில் வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஆனால் ஜெகதீஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது நண்பர்களிடம் குடும்பத்தினர் விசாரித்தனர். அதில், ஜெகதீஷ் குவாரியில் குளித்துவிட்டு முன்னதாகவே கிளம்பிவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக குவாரிக்கு சென்று தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் (11ம் தேதி) காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மதியம் குவாரியில் ஜெகதீஷின் உடல் மிதந்தது. சடலத்தை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்து போலீசார், சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனகப்பள்ளி என்டிஆர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெகதீஷின் தந்தை சீதாராவ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தபோது பரிதாபம்; திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை பலி: குவாரியில் குளித்தபோது நீரில் மூழ்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article