நண்பனின் தங்கையை உல்லாசத்திற்கு அழைத்த விவகாரம் பார்ட்டிக்கு அழைத்து ரூ.1 கோடி கேட்டு தவெக நிர்வாகி மிரட்டப்பட்டாரா? கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி புகாரால் பரபரப்பு

2 weeks ago 4

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் ஸ்ரீவிஷ்ணு குமார் என்பவர் வசித்து வருகிறார். யூடியூபரான இவர், தற்போது தவெகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் நண்பர் ஒருவரின் தங்கைக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உல்லாசத்திற்கு அழைத்ததாகவும், அதுதொடர்பாக, ஸ்ரீவிஷ்ணு குமாரை அவரது நண்பர்கள் சிலர் பார்ட்டிக்கு அழைத்து இளம்பெண்ணுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை காட்டி அடித்து, உதைத்து கண்டித்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 2 நாட்களுக்கு முன்பு வைரலாகியது. இந்நிலையில், ஸ்ரீவிஷ்ணு குமார் கடந்த 23ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கடந்த 15ம் தேதி மலேசியா நண்பர் நரேஷ், அவர் மூலம் அறிமுகமான சந்தோஷ், காயத்ரி, ரகுநாத் ஆகியோர் தி.நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தனர்.

அதன்படி நான் அங்கு சென்றேன். நாங்கள் அனைவரும் மது அருந்தினோம். அப்போது அனைவரும் நன்றாக பேசினார்கள். சிறிது நேரத்தில் ரகுநாத் என்பவர் எனது பின்பக்கம் பலமாக தாக்கினார். என்ன என்று புரியாத நிலையில் இருந்தபோது, சந்தோஷின் உறவினர் பெண்ணிடம் நான் தவறாக நடந்ததாக கூறி ஆபாசமாக பேசி தாக்கினர். எனது செல்போனை பிடுங்கி பாஸ்வர்டு வாங்கினர். பிறகு ‘நாங்கள் சொல்வது போல் வீடியோவில் பேசினால் உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவோம்’ என்றனர். கடைசியாக ரூ.1 கோடி பணம் கொடுத்தால் உன்னை விட்டுவிடுவோம் என்று மிரட்டினர். அதற்கு நான், தற்போது என்னிடம் பணம் இல்லை. எனது மனைவிடமோ அல்லது எனது தாய் மற்றும் உறவினர்களிடம் பணம் கடனாக பற்று கொடுத்துவிடுகிறேன் என்று கூறி அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று வந்துவிட்டேன்.

ஆனால், அவர்கள் நான் பணம் கொடுக்கவில்லை என்று தெரிந்து எனது செல்போனில் இருந்து இன்ஸ்டாகிராம் கணக்கை பெயர் மற்றும் பாஸ்வேர்டு மாற்றம் செய்து என்னை மிரட்டிய வீடியோவை பதிவேற்றம் செய்தார்கள். என்னை மிரட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்த புகார் அளித்த மறுநாள் தவெக நிர்வாகி ஸ்ரீவிஷ்ணு குமாரை மிரட்டிய நபர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீவிஷ்ணுகுமார் மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தனர். அதில், பெண்கள் விவகாரத்தில் எனது தங்கை மட்டும் அல்ல, மற்ற பெண்களுக்கும் அவர் தவறாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.

நாங்கள் ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டி அடித்ததாக ஸ்ரீவிஷ்ணு குமார் கூறியது முற்றிலும் தவறானது. அவரது போனை அவரது மனைவி அஸ்மிதாதான் அனைத்து பாஸ்வேர்டு மற்றும் இன்ஸ்டாகிராம் டிபிகளையும் மாற்றினார். வீடியோக்களையும் அவர் தான் பதிவேற்றம் செய்துள்ளார். நாங்கள் மாற்றவில்லை. போனை அவரது மனைவி தான் வைத்திருந்தார். நாங்கள் வைத்திருக்கவில்லை. அவர் தனது போன் தொலைந்துவிட்டதாக நினைத்துள்ளார். ஆனால் அவரது போனை அவரது மனைவி தான் வைத்திருந்தார். நாங்கள் ஸ்ரீவிஷ்ணு குமாரை கடத்தி தாக்கவில்லை. அவராக தான் வீட்டிற்கு வந்தார். தங்கைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால் தான் தாக்கினோம். அவர் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அதற்காக ஆதாரத்தை புகாருடன் இணைத்துள்ளோம் என்று புகார் அளித்திருந்தனர். இந்த இரண்டு புகார்கள் மீதும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நண்பனின் தங்கையை உல்லாசத்திற்கு அழைத்த விவகாரம் பார்ட்டிக்கு அழைத்து ரூ.1 கோடி கேட்டு தவெக நிர்வாகி மிரட்டப்பட்டாரா? கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article