நடைபயணத்திற்கு முன் தந்தையிடம் ஆசி வாங்க செல்லும் அன்பானவரின் ‘தைலாபுரம் தோட்டம்’ ரகசியம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

7 hours ago 2

‘‘நடைபயணம் தொடங்கும் முன் தந்தையிடம் ஆசி வாங்க அன்பானவர் ‘தைலாபுரம் தோட்டம்’ செல்வதில் ஏதோ முக்கிய காரணம் இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் விழி பிதுங்கிபோயிருப்பது தொண்டர்கள்தானாம்.. எந்த பக்கம் சரிந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற யோசனையில்தான் இருக்காங்களாம்.. தந்தையிடம் மகன் இறங்கி போவதுதான் நியாயம் என்ற கருத்துதான் பொதுவாக பாட்டாளிகளிடம் எழுந்திருக்காம்.. அதே நேரத்தில் தந்தையின் பக்கம் ரெண்டு மகள்களும் சேர்ந்திட்டாங்களாம்.. இதனால் ரெண்டு அணியும் உடனடியாக சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கு..

 

ஆனால் இதில் திடீர் திருப்பமாக தந்தையை சந்திக்க தைலாபுரம் தோட்டத்திற்கு மகன் வர இருக்கும் திட்டமும் இருக்குதாம்.. மோதல் தொடங்கிய நேரத்தில், பனையூரில் இருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து சந்திச்சாராம் மகன்.. அப்போது இருபது ஆண்டுகாக சொல்லிவரும் நடைபயணம் சென்று தினந்தோறும் மக்களையும், தொண்டர்களையும் சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவு போட்டாராம்.. அதன்படியே நடைபயணத்தை மகன் அறிவிச்சியிருக்காராம்.. பயணம் தொடங்கும் முன்பு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து தந்தையிடம் ஆசி வாங்க வரப்போகிறாராம்.. அப்போது முழு சமரசத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் அவரோடிருக்கும் முக்கிய புள்ளிகள் ஆலோசனை சொல்லியிருக்காங்களாம்..

இதுக்கும் ஒரு காரணம் இருக்குதாம்.. தந்தையிடம் இருந்து விலகியே போனால், தைலாபுரம் கைவிட்டு போய்விடும் என்ற நிலை ஏற்பட்டிருக்கு.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே நுழைந்துவிட்டால் தைலாபுரம் தோட்டத்தையும் கைப்பற்றி விடலாம் என சொல்லப்பட்டிருக்காம்.. இதனை நன்கு புரிந்துக்கிட்ட மகன், கோபத்தை எல்லாம் விட்டுவிட்டு தந்தையின் பாதம் தொட்டு வணங்க வரப்போறதாக மூத்த கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முக்கிய அதிகாரிக்கு பயந்து யாரும் கடைகோடி மாவட்டத்திற்கு இடமாறுதல் கேட்டு வருவதில்லையாமே ஏன்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடைகோடி மாவட்டத்தில் சுகாதார அதிகாரியாக இருந்தவர் பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தையும் சேர்த்து இரண்டு மாவட்டங்களில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனக்கு வெயிலூர் மாவட்டத்திற்கு மாறுதல் வேண்டும், அதுவும் உணவு பாதுகாப்பு துறைதான் வேண்டும் என்று அவர் விரும்பி கேட்டு வந்துவிட்டாராம்.. தற்போது அந்த வாய்ப்பு கிடைக்க, இடமாறுதல் அவருக்கு வழங்கப்பட்டிருக்காம்.. ஆனால் கடைகோடி மாவட்டத்தில் கடலோர மாவட்டத்தில் தில்லையாண்டவர் ஊரில் இருந்து கடைகோடி மாவட்டத்திற்கு மீண்டும் கூடுதல் பொறுப்பில் அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறாராம்..

ஏன் பொறுப்பு அதிகாரியாக இல்லாமல் தனி அதிகாரியை கடைகோடி மாவட்டத்தில் நியமிப்பது இல்லை என்று சுகாதாரத்துறை வட்டாரத்தை கேட்டால் தற்போதுள்ள மாவட்ட முக்கிய அதிகாரிக்கு பயந்து யாரும் இங்கு இடமாறுதல் பெற்று வர விரும்பவில்லை என்கின்றனர்.. அப்புறம், வேலையை ஒழுங்காக பார்க்க சொன்னால் சிலருக்கு கசக்கத்தானே செய்யும்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தலைமை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு ‘ப’ விட்டமினை அள்ளி வீசியும் கூட்டத்தை கூட்ட முடியாமல் இலைக்கட்சியினர் ரொம்பவே திண்டாடிப் போயிட்டாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் இலை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கு.. இதில், இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்களாம்.. மலைக்கோட்டை மாநகரில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தலைமை அறிவித்ததும் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை எப்படியாவது கூட்டிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாங்களாம்.. இதற்காக, ‘விட்டமின் ப’ அள்ளி வீசப்பட்டதாம்.. வெளியூர்களில் இருந்தும் ‘விட்டமின் ப’ கொடுத்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டார்களாம்.. அப்படி இருந்தும் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேரவில்லையாம்.. இதை கண்டு முக்கிய நிர்வாகிகள் ‘ப’ விட்டமின் ெகாடுத்தும் கூட நம்ம கட்சியால கூடடத்தை இனி கூட்ட முடியாதே என நொந்துகொண்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி அமைச்சர்கள் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவதால் பூட்டு மாவட்ட இலைக்கட்சியினர் அணி மாறுவதற்கு தயாராக இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் புகழ் பெற்ற மலைக்கோட்டை போல ஸ்ட்ராங்-ஆ இருந்த இலைக்கட்சி, தற்போது மண் கோட்டை போல சரிவடைந்து வருதாம்.. ஏற்கனவே, இங்கு ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்கள் பலம் பெருகி வரும் சூழலில், மாஜி அமைச்சர்களான இருவரின் எதிரெதிர் அரசியல்போக்கு கட்சிக்கு பெரிய மைனஸ் ஆகியுள்ளதாம்.. இவர்களின் செயல்பாடுகள் மீது தலைமைக்கு கடும் அதிருப்தி இருக்காம்.. இவர்களின் மகன், மருமகன் ஆகியோரும் தங்களது பவரை காட்ட வேண்டுமென தனி கோஷ்டி சேர்த்துக்கிட்டு வர்றாங்களாம்.. போதாகுறைக்கு சேலத்துக்காரரின் ஆதரவோடு இருக்கும் முன்னாள் எம்எல்ஏவான டாக்டர், தன் பங்குக்கு தனி அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம்..

இப்படியாக பூட்டு மாவட்டத்தில் இலைக்கட்சியில் பல கோஷ்டிகள் இருக்காங்க.. இந்த சூழலில் தாமரைக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது, பெரிய பின்னடைவை தந்துள்ளதாம்.. ஏற்கனவே இந்த மாவட்டத்திலும், பக்கத்துல உள்ள ஹனிபீ மாவட்டத்திலும், தாமரை கட்சியில உள்ள முக்கிய நிர்வாகிகள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கு.. போதிய மரியாதையும் இல்லை. இவர்களோட சேர்ந்தால் கிடைக்கிற ஓட்டும் கிடைக்காமல் ேபாய் விடும். முக்கியமா, சிறுபான்மை ஓட்டு சுத்தமா வராது. பேசாமல் கட்சி மாறி விடலாமா என பலர் யோசித்துக் கொண்டிருக்கின்றனராம்.. விரைவில் பூட்டு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் அணி மாறுவதாக செய்தி வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என்கின்றனர் இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்..’’ என்ற முடித்தார் விக்கியானந்தா.

The post நடைபயணத்திற்கு முன் தந்தையிடம் ஆசி வாங்க செல்லும் அன்பானவரின் ‘தைலாபுரம் தோட்டம்’ ரகசியம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article