புதுடெல்லி: நடுவானில் புயல், ஆலங்கட்டி மழையில் இந்திய விமானம் சிக்கிய நிலையில், எம்பிக்கள் உட்பட 220 பயணிகளின் உயிருடன் பாகிஸ்தான் விளையாடியதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 21ம் தேதி டெல்லியிலிருந்து நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் திடீரென ஏற்பட்ட புயல் மற்றும் ஆலங்கட்டி மழையால் வானில் பறப்பதில் சிக்கலை எதிர் கொண்டது. இதனால், அந்த விமானம் அமிர்தசரஸ் வான் பகுதியில் பறந்தபோது, அதி தீவிரமான புயலைத் தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முன் அனுமதி கோரி லாகூர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டார்.
ஆனால், பாகிஸ்தானின் லாகூர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அவரது கோரிக்கையை நிராகரித்தது மட்டுமின்றி, அவருக்கான அனுமதியை மறுத்துவிட்டது. இதனால், விமானம் தனது பழைய பாதையிலேயே பறந்து, கடுமையான சோதனையை எதிர்கொண்டது. விமானத்தில் பயணம் செய்த 220க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட பலர் உயிர் அச்சத்தில் தவித்தனர். விமானம் தாறுமாறாக பயணித்தது. இருந்தும், விமானத்தை மிகவும் கட்டுப்பாடுடன் இயக்கிய விமானி, நகர் விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார்.
ஆனால் விமானத்தின் முன்பகுதி (நோஸ் கோன்) புயலால் சேதமடைந்தது. அதேநேரம் எவ்வித உயிர்சேதமோ, பாதிப்போ இன்றி பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த சம்பவம், பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணியில் நடந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியின் காரணமாக, இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளது.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘ஆபத்தில் சிக்கிய விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது விமானம் ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக நகரில் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் இந்த முடிவு, பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
The post நடுவானில் புயல், ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்; 220 பயணிகளின் உயிருடன் விளையாடிய பாகிஸ்தான்: எம்பிக்கள் உட்பட பலரும் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.