
மும்பை,
டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் சீரடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் ஒரு பயணி மதுபோதையில் இருந்துள்ளார். அந்த பயணி விமானத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் வழியில் அங்கிருந்த விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண், பயணி பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விமானம் சீரடியில் தரையிறங்கிய உடன் பாலியல் தொல்லை சம்பவம் குறித்து பாதுகாப்புப்படை அதிகாரிகளிடம் பணிப்பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நபர் ரஹதா நகர போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.