
மும்பை,
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர், நடிகை அடா சர்மா. 2008-ம் ஆண்டு '1920' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு 'சன்பிளவர்' என்ற வெப் சீரிசில் நடித்திருந்தார். இதில் அவர் ஏற்றிருந்த ரோஸடி மேத்தா என்ற கதாபாத்திரத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்ட ரசிகர் ஒருவர், தன்னுடைய ரத்தத்தைக் கொண்டு அடா சர்மாவின் முகத்தை வரைந்திருக்கிறார். இந்த ஓவியம் வலைதளத்தில் வைரலானது.
இதைப் பார்த்த அடா சர்மா, "1920, தி கேரளா ஸ்டோரி, கமாண்டோ-3, சன்பிளவர், ஆகிய படங்களில் நான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் நான் பாக்கியம் செய்தவளாக கருதுகிறேன். அவர்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை என்னால் உணர முடிகிறது.
என் ஓவியத்தை ரத்தத்தில் வரைந்த ரசிகரின் கலையை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் ரோஸி ஒரு தழுவல் கதாபாத்திரம். அதை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதற்காக நிஜ வாழ்க்கையில் உங்கள் ரத்தத்தை சிந்த வேண்டாம். உங்களின் ரத்தத்தின் மதிப்பை நான் உணர்வேன். எனவே கலையை உருவாக்க, இதுபோன்று உடலை வருத்திக்கொள்ள வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.