
கோவா,
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில், நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியின் 2-வது சுற்றில் எப்.சி. கோவா அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோவா அணியில் போர்ஜா ஹெரேரா, அர்மான்டோ சாதிகு கோல் போட்டனர். பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி கடைசி நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதன் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பெங்களூரு அணி (3-2) கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணி இறுதி ஆட்டத்தை எட்டுவது இது 4-வது முறையாகும்.