
மும்பை,
நடிகர் சயீப் அலிகான் 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு மனைவி மற்றும் சக நடிகைகளுடன் சென்றிருந்தார். அப்போது ஓட்டலில் நடிகருக்கும், தொழில் அதிபர் இக்பால் மிர் சர்மா என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான நடிகை மலைக்கா அரோரா கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவில், "நடிகை மலைக்கா அரோரா கோர்ட்டு நடவடிக்கைகளை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறார். அவருக்கு கோர்ட்டில் ஆஜராக கடைசி வாய்ப்பு அளித்து இந்த வழக்கை ஜூலை 9-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அன்றைய தினம் நடிகை கோர்ட்டில் ஆஜராக தவறினால், அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.