
சென்னை,
மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். 'ராஜா ராணி', 'காலா', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 'பகீரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
தற்போது 'கெஸ்ட்-2', 'தி நைட்', 'புரவி', '120 ஹவர்ஸ்', 'ஆயிரம் ஜென்மங்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால், அவ்வப்போது கிளாமர் தூக்கலான படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் தனது பெயரில் பண மோசடி நடைபெறுவதாக சாக்ஷி அகர்வால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது நம்பர் என்று கூறி இன்னொரு செல்போன் எண்ணில் இருந்து சிலர் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே என் பெயரில் யாராவது அப்படி பேசினால் நம்பிவிடாதீர்கள். நெருங்கியவர்களுக்கு என் செல்போன் எண் தெரியும். தொழில் விஷயமாக என்னை தொடர்புகொள்ள நினைத்தால் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம், என்று கூறியுள்ளார்.