நடிகர் விஷால் உடல் நலம் குறித்து அவதூறு; யூடியூபர் சேகுவாரா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு: நடிகர் நாசர் புகார் மீது போலீசார் நடவடிக்கை

2 weeks ago 1


மாதவரம்: நடிகர் விஷால் உடல் நலம் குறித்து அவதூறாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த யூடியூபர் சேகுவாரா மற்றும் அதை ஒளிப்பரப்பிய 2 யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷால் நடித்து வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முன்னதாக, படத்தின் அறிமுக விழாவின்போது, திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் விஷால் கலந்துகொண்டு பேசினார். அப்போது நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சல் காரணமாக சற்று பலவீனமாக காணப்பட்டார். இதுகுறித்து யூடியூபர் சேகுவாரா என்பவர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் விஷால் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கை மற்றும் கால் நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவரான நடிகர் நாசர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நடிகர் விஷால் குறித்து உன்மைக்கு புறம்பாக அவதூறாக பேசிய யூடியூபர் சேகுவாரா மற்றும் அதை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், தேனாம்பேட்டை போலீசார் யூடியூபர் சேகுவாரா பேச்சு குறித்து ஆய்வு செய்தனர். அதில் அவர் நடிகர் விஷால் குறித்து அவதூறாக பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து யூடியூபர் சேகுவாரா மற்றும் அதை ஒளிபரப்பிய 2 யூடியூப் சேனல்கள் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடிகர் விஷால் உடல் நலம் குறித்து அவதூறு; யூடியூபர் சேகுவாரா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு: நடிகர் நாசர் புகார் மீது போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article