நடிகர் தினேஷ், சுவாசிகாவுக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி - 'லப்பர் பந்து' பட இயக்குநர்

1 month ago 19

சென்னை,

'லப்பர் பந்து' படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, "இந்த படத்துக்கு 'லப்பர் பந்து' என்கிற டைட்டில் பொருத்தமாக இருக்கிறது என எல்லோரும் சொன்னார்கள். ஆனால் முதலில் இதை வைத்தபோது எனக்கு பிடிக்கவில்லை. உதவி இயக்குனர்கள் இந்த டைட்டிலை கொடுத்தார்கள். அட்டகத்தி தினேஷிடம் இந்த படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தபோது படத்தில் அவருக்கு 40 வயது என்றும் அவருக்கு சஞ்சனா மகள் என்றும் கூறிய போது நான் எதிர்பார்த்த அளவிற்கு அவர் அதிர்ச்சி அடையவில்லை. அதன் பிறகு இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சொல்லு என கேட்டவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். படத்தில் அவர் விஜயகாந்த் ரசிகராக இருந்தார். நான் எந்த அளவிற்கு விஜயகாந்தை ரசிக்கிறேனோ அதே அளவிற்கு அவரும் ஆராதிக்கிறார் என்பதை இந்த ஒன்றரை வருட காலத்தில் நான் புரிந்து கொண்டேன். அது கூட அவரை இந்த படத்திற்குள் இழுத்து வந்திருக்கலாம்.

சுவாசிகா அருமையாக நடித்திருக்கிறார். அவரை வேண்டுமென்று பாராட்டாமல் இருக்கவில்லை. நான் பாராட்டுவதை விட ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருமே அவரது நடிப்பை பாராட்டினார்கள். வேடிக்கை பார்க்க வந்த என் மனைவி கூட என் தலைவி தாண்டா கெத்து என்று கூறினார். சுவாசிகா என்னிடம் கதை கேட்க ஆரம்பிக்கும் முன்பே எனக்கு தமிழில் ஒரு நல்ல ரீ என்ட்ரியாக இது இருக்க வேண்டும் என உணர்ச்சி பெருக்குடன் கூறினார்.

ஒரு ஹீரோயினுக்கு அம்மாவாக ஒரு ஹீரோயின் என்கிற கதாபாத்திரம் என்று கூறியதுமே ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது அவருக்கு மகிழ்ச்சி என்றால் உண்மையிலேயே இந்த படம் வெற்றி தான். தினேஷும் சுவாசிகாகவும் ஒரே கட்டத்தில் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தார்கள். இந்த படத்தில் அது அவர்களுக்கு கிடைத்திருந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.

ஹரிஷ் கல்யாணுக்கு படப்பிடிப்பு தளத்தில் நான் நிறைய கஷ்டங்கள் கொடுத்திருக்கிறேன். டார்ச்சர் செய்திருக்கிறேன். அவர் நினைத்திருந்தால் தயாரிப்பு தரப்பில் கூறி அதை எல்லாம் அவருக்கு சாதகமாக மாற்றி இருக்கலாம். ஆனால் இந்த கதையை நம்பி, என்னை நம்பி இதுவரை என்னுடன் பயணித்து வருகிறார். தயாரிப்பாளர் லஷ்மனிடம் நான் முதலில் கொண்டு சென்ற கதை ஒரு ரொமாண்டிக் காதல் கதை. அப்படி சொன்னதுமே அவர் வேண்டாம் என கூறிவிட்டார். அவர் எதிர்பார்த்தது வாழ்வியல் சார்ந்த ஒரு கிராமத்து கதையை. அதன் பிறகு தான் இந்த லப்பர் பந்து கதையை ஒரு 20 நிமிடம் கூறினேன். சில நாட்களில் கூப்பிடுவதாக கூறினார். இரண்டரை மணி நேரம் கதை கேட்டு கட்டிப்பிடித்து பாராட்டியவர்களே என்னை கூப்பிடவில்லை. இவர் எங்கே கூப்பிட போகிறார் என்று சந்தேகம் இருந்தது. அவரது 'தண்டட்டி' படம் பூஜை போட்ட போது என்னையும் அழைத்து அன்றைய தினமே எனது அடுத்த படத்திற்கு நீ தான் இயக்குநர் என்று ஒப்பந்தம் போட்டு விட்டார்" என்றார்.

Read Entire Article