
சென்னை,
வீட்டின் முன்பு காரை நிறுத்தியது தொடர்பாக, நீதிபதியின் மகனுடன் ஏற்பட்ட தகராறில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இது பற்றி நடிகை சனம் ஷெட்டி, ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அதில் "தர்ஷன் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டபோது, என் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். நிறைய துரோகங்களை அனுபவித்த எனக்குக் கிடைத்த நியாயம் என்று, இதனை எண்ணிக் கொள்கிறேன். ஏனெனில் நானும் ஒரு சாதாரணப் பெண்தான். எனக்கும் இயல்பான உணர்ச்சிகள் உண்டு. அதே நேரத்தில் இன்னொருவருக்கு நடக்கும் அநியாயத்தில் எனக்கான நியாயத்தை தேட முடியாது என்பதையும் நான் உணர்கிறேன். தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்தால், நான் நிச்சயம் அந்த நபருக்காக குரல் கொடுத்து இருப்பேன்.
அதற்காக நான் மதர் தெரசா என்று சொல்ல மாட்டேன். இதில் எனக்கும் ஒரு சுயநலம் உண்டு. மனசாட்சிக்கு விரோதமாக ஒரு செயல் செய்தால் கூட, அன்றைய தினம் எனக்கு தூக்கம் வராது. இந்த விவகாரத்தில் எனக்கு பெரிய சந்தேகம் உள்ளது. ஒரு சாதாரண பார்க்கிங் பிரச்சினைக்காக சட்டம் இந்தளவில் வேகமாக வேலை செய்யுமா?, கைது நடவடிக்கை பாயுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மையான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வெளியிடுவதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது?.
இந்த பிரச்சினைக்கு பின்னணியில் உள்ள உண்மை நிலவரம் நிச்சயம் வெளியே தெரிய வேண்டும். தவறு செய்யாதவர்கள் தண்டனை அனுபவிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.