
மும்பை,
நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார். பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானை கொலை செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இதனால் மத்திய அரசு தரப்பில் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குண்டு துளைக்காத காரை சல்மான் கான் பயன்படுத்தி வருகிறார். மேலும் வீட்டின் பால்கனியிலும் குண்டு துளைக்காத கண்ணாடியை பொருத்தி உள்ளார்.
இந்த நிலையில் மும்பை ஒர்லி போக்குவரத்து போலீஸ் வாட்ஸ்-அப் எண்ணுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர் சல்மான் கானை வீடு புகுந்து கொலை செய்துவிடுவேன் எனவும், அவரின் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் எனவும் மிரட்டல் விடுத்து இருந்தார். இது குறித்து ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அடையாளம் காணப்பட்ட குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த மயங்க் பாண்டியா என்ற 26 வயது இளைஞரை ஒர்லி போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.