புதுடெல்லி: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ் கோகாய். மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர். இவரது மனைவி எலிசபெத் கோல்பர்ன். வெளிநாட்டை சேர்ந்தவர். இவருக்கு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நேற்று பா.ஜ குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில்,’ தேசிய பாதுகாப்பு தொடர்பான சில தீவிரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மக்களவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன், பாகிஸ்தான் திட்டக் கமிஷன் ஆலோசகர் அலி தௌக்கீர் ஷேக் மற்றும் ஐஎஸ்ஐ யின் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் இது மிகவும் கவலைக்குரியது. காங்கிரஸ் தலைமை மற்றும் கோகாய் விளக்கம் அளிக்க வேண்டும். கோகாயின் மனைவி ஒரு வெளிநாட்டு பிரஜை. அவர் பணிபுரியும் அமைப்புக்கு ஜார்ஜ் சோரோஸ் நிதியளிப்பதாலும் கேள்வி இன்னும் தீவிரமானது. இதற்குப் பிறகும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தொடர வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பினார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பதிவில்,’ ஐஎஸ்ஐ தொடர்புகள், மூளைச்சலவை மற்றும் தீவிரவாதிகளுக்காக இளைஞர்களை பாகிஸ்தான் தூதரகத்திற்கு அழைத்துச் சென்றது. கடந்த 12 ஆண்டுகளாக கவுரவ் கோகாய் மனைவி இந்திய குடியுரிமை பெற மறுப்பது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரிப்பு காட்டாதீங்க பாஸ்… கவுரவ் கோகாய் பதிலடி
பா.ஜவின் குற்றச்சாட்டு குறித்து கவுரவ் கோகாய் கூறுகையில், ‘பா.ஜவின் குற்றச்சாட்டு சிரிப்பூட்டக்கூடியது. வேடிக்கையானது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் பா.ஜ முன்வைத்து வருகிறது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக அதே அவதூறு பிரச்சாரத்தை செய்தார்கள். ஜோர்ஹாட் தொகுதி மக்கள் என்னை எம்பியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் அதற்கு பதிலளித்தனர். அசாம் முதல்வர் குடும்பத்தினர் மீது பல்வேறு நில மோசடி வழக்குகள் டெல்லியில் உள்ள பாஜ தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது முதல்வர் பதவி பறிபோய்விடும் என்பதால் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற அவதூறு பிரசாரம் மேற்கொள்கிறார். அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது, ஆனால் பாஜவின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால் என் மீது இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளதாக தெரிகிறது’ என்றார்.
The post மக்களவை காங். துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மனைவிக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பு: பா.ஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.