
சென்னை,
இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டார்க்' திரைப்படத்தில் அஜய் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 'டாடா' படத்தின் இயக்குநரான கணேஷ் கே. பாபு கதை எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி சக்தி ஒளிப்பதிவு செய்ய, மனு ரமேஸன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ. பி. வி. மாறன், கணேஷ் கே. பாபு. கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜய் கார்த்தி கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'டார்க்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூரி மற்றும் நட்சத்திர இயக்குநர் நெல்சன் ஆகியோர் இணைந்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதில் நாயகனின் இரு வேறு தோற்றங்கள் வெவ்வேறு உணர்வுகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஹாரர் திரில்லர் படைப்புகளை ரசிக்கும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.