
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர். அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, தமிழ்நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது என்ற அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு எனது பாராட்டுகள்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வக்கீல்கள் வாதாடி இருக்கிறார்கள். அவர்களையும் பாராட்டுகிறேன். இது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமன்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது.
இந்த வழக்கின் தீர்ப்புக்கு தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என யாரும் உரிமை கோருவதில் நியாயம் இல்லை. சான்றுகள் வலுவாக இருந்தது. குறிப்பாக செல்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பதிவு செய்த தடயங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதனால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.