நடிகரை கத்தியால் குத்திய வழக்கில் 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: மும்பை போலீசார் தகவல்

1 week ago 1


மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வரும் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள், கடந்த ஜனவரி 16ம் தேதி கொள்ளையடிக்கும் நோக்கில் வங்கதேசத்தை சேர்ந்த ஷெஹ்சாத் என்பவன் புகுந்தான். இவன் வீட்டில் இருந்த சைஃப் அலி கானை கடுமையாக தாக்கினான். அதனால் அவரது முதுகெலும்பின் மார்பு பகுதி மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர், கடந்த ஜனவரி 21 அன்று வீடு திரும்பினார். போலீசாரின் விசாரணையில் குற்றவாளி ஷெஹ்சாத், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய நபர் எனவும், கொல்கத்தாவில் பல இடங்களில் தங்கியிருந்து, பின்னர் மும்பைக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்ட ஷெஹ்சாத் தொடர்பான வழக்கை பாந்த்ரா நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மும்பை காவல் துறை மேற்கண்ட வழக்கு தொடர்பாக 1,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட குற்றவாளி ஷரிஃபுல் ஷெஹ்சாத் இஸ்லாமுக்கு எதிராக, மும்பை காவல்துறையால் பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அவை 1,000 பக்கங்களுக்கு மேல் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த கத்தியின் பாகங்கள், சைஃப் அலி கானின் உடலில் இருந்தவை மற்றும் குற்றவாளியிடம் இருந்தவை ஆகியவை ஒரே கத்தியின் மூன்று பகுதிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணையின்போது பெறப்பட்ட குற்றவாளியின் இடது கையின் கைரேகை அறிக்கையும், அந்த குற்றத்துடன் தொடர்புடையதாக உள்ளது. தற்போது ஷெஹ்சாத்துக்கு எதிரான 1,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்’ என்றனர்.

The post நடிகரை கத்தியால் குத்திய வழக்கில் 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: மும்பை போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article