தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தேசிய ஆதி திராவிட ஆணைய இயக்குநர் ரவிவர்மன் நேற்று நேரில் விசாரணை நடத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் தினேஷ் (32), மகள்கள் மேனகா (31), கீர்த்திகா(29). இதில் கீர்த்திகா இன்ஜினியரிங் பட்டதாரி. கடந்த 8ம்தேதி நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் தனது இரண்டு தங்கைகளுடன் நின்று கொண்டிருந்த தினேஷை, விசாரணைக்காக அழைத்து சென்று பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதை கண்டித்து அவரது சகோதரிகள் மேனகா, கீர்த்திகா ஆகியோர் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்தனர். இதில் கீர்த்திகா கடந்த 9ம்தேதி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று 9வது நாளாக கிருத்திகாவின் உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் நேற்று நடுக்காவேரிக்கு சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து இயக்குநர் ரவிவர்மன் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை அறிக்கை விரைவில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
* ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
போலீஸ் நிலையம் முன் இறந்த பெண்ணின் உறவினர் துர்கா தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த உத்தரவில், பெண்ணின் உடலை பெற்றுக் கொள்வது குறித்து மனுதாரர் தரப்பில் முடிவு செய்ய வேண்டும். தவறினால் காவல்துறையினர் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல சம்பந்தப்பட்ட வழக்கில் தஞ்சை நடுக்காவேரி காவல்துறையினர் எந்த விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது. இந்த மனுவிற்கு திருச்சி சரக ஐஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென கூறி விசாரணையை ஏப்.22க்கு தள்ளி வைத்தது.
The post காவல் நிலையம் முன் இன்ஜி.பட்டதாரி பெண் தற்கொலை தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை: இன்ஸ்பெக்டர் மீது வன்கொடுமை வழக்கு appeared first on Dinakaran.