
நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளிக்கிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம்.
நடப்பு நிதியாண்டில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம்வரை குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணவீக்கம் சரிந்து வருவதால் இந்த அளவுக்கு வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி குறைக்கப்படால் , வாகன கடன்கள் மீதான வட்டி உள்ளிட்டவை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.