
சேலம்,
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 41 ஆயிரத்து 197 கனஅடி தண்ணீர் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் மாலை சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 615 கனஅடியாக இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது. கடந்த 2 நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில், மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 29-ந்தேதி மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்படலாம் என்பதால் காவிரி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.