நடத்தையில் சந்தேகம்... நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்

3 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகா் ஆனேக்கல்லை அடுத்த ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராமையா லே-அவுட்டை சேர்ந்தவர் மோகன். இவர் ஹெப்பகோடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கங்கா. இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அந்த குழந்தை படித்து வருகிறது. இந்தநிலையில் மோகனுடன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நண்பர் ஒருவருக்கும் கங்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மோகன், மனைவி கங்காவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி கங்காவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டபோது, கோபமடைந்த கங்கா, மோகனுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டு சென்றார்.

தற்போது 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இருப்பினும் மோகன் அடிக்கடி மனைவி வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்து வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மனைவி வீட்டுக்கு சென்றபோது, அவர் குழந்தையை காண்பிக்க முடியாது என்று தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் கங்காவை கொலை செய்ய மோகன் திட்டமிட்டார்.

அதன்படி நேற்று காலை கங்கா குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.அப்போது ராமையா லே-அவுட் அருகே நடுரோட்டில் அவரை வழிமறித்து மோகன் தகராறு செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கங்காவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். 7 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கங்கா ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த ஹெப்பகோடி போலீசார் கங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மோகன் இந்த கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை கைது செய்த ஹெப்பகோடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article