
சென்னை,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பராமரிப்பில், சென்னையில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 16 அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழகத்தின் மற்ற நகரங்களில், 76 ஆயிரத்து 875 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, சிதிலமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்புகளில், கழிவு நீர் வடிகால் சேதமடைந்தும், மின்சார வழித்தடங்கள் முறையான பராமரிப்பின்றியும் காணப்படுகின்றன. குடியிருப்புகளில், தாழ்வான சுவர்களில் மீட்டர் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், மின்சார கட்டமைப்புகளை வலுப்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டு, அதற்கான உத்தரவை உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கி உள்ளது. அந்த வகையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், மீட்டர் பாக்ஸ்களின் உயரத்தை அதிகரிக்கவும், உயரம் குறைவான மின் கம்பங்களை மாற்றியமைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது, தாழ்வான மீட்டர் பாக்ஸ்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், உயரம் அதிகரிக்கும் பணிகள் தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, சேதமடைந்த, திறந்த நிலையில் உள்ள மின் பெட்டிகளையும் மாற்றியமைக்கவும், சீரமைக்கவும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், டிரான்ஸ்பார்மர்களை சுற்றிலும், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி அசுத்தம் ஏற்படுத்தாத வகையில், மாநகராட்சியுடன் இணைந்து தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.