நகராட்சி பகுதிகளில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

11 hours ago 2

*விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட லால்கான் வீதியிலுள்ள நியாயவிலை கடை, சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிரிவு அலுவலகம், நகராட்சி பேருந்து நிலையம், அறிவு சார் மையம், நந்தனார் அரசு ஆண்கள் விடுதி, மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளி, தட்சன் குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நகர்ப்புற பகுதி மக்கள் போட்டி தேர்விற்கு தயாராக வேண்டும் என்பதற்காகவும், தேவையான புத்தகங்களை இலவசமாக வாங்கி பயில வேண்டும் என்பதற்காக நகராட்சிகள் தோறும் அறிவுசார் மையங்கள் அமைத்திட உத்தரவிட்டார். அதனடிப்படையில் சிதம்பரம் நகராட்சியில் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் திறந்து வைக்கபட்டுள்ளது.

சிதம்பரம் லால்கான் வீதியிலுள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ள பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிரிவு அலுவலகத்தில் புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம் போன்ற பல்வேறு பிரிவுகளையும், மருத்துவமனையில் பராமரிக்கப்படும் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகம், வார்டுகள் மற்றும் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் கூடுதலான பேருந்துகள் வந்து செல்வதாலும், தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்தாலும் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்து நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்திடும் பொருட்டு நவீன பேருந்து நிறுத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காகவும் பிற இடங்களுக்கு செல்லாமல் தங்களது கிராமங்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியானது, அரை நூற்றாண்டு கால வரலாறு கொண்ட பள்ளியாகும். பள்ளியின் வளாகத்திலேயே மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தரமான உணவை சுவையுடன் வழங்கிட வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தின் மூலம் தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் கல்வித்திறன் எவ்விதத்திலும் குறையக் கூடாது என்பதற்காகவும் சிறப்புப் பள்ளிகள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளியில் காது கேளாதோர் 25, மனவளர்ச்சி குன்றியோர் 30, தொழிற்பயிற்சி 22 என மொத்தம் 77 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் கற்பித்தல் முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தட்சன் குளம் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுப்புற சுவர்கள் மேம்படுத்தப்பட்டு குளத்திலுள்ள செடிகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்லும் வண்ணம் அழகுபடுத்தப்பட உள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். ஆய்வின்போது மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, சிதம்பரம் நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post நகராட்சி பகுதிகளில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article