நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2569 பணியிடங்களை நிரப்ப அனுமதி: உயர்நீதிமன்றம் வழங்கிய தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

7 hours ago 3

புதுடெல்லி தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலி பணியிடங்களுக்கான நியமனம் தொடர்பான விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2569 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அரசாணை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

இதில் இரண்டு லட்சம் பேர் தேர்வுகளை எழுதினர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு நேர் காணல் முடிந்த நிலையில் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம்,\\” நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நியமனங்களை மேற்கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் பூர்ணிமா கிருஷ்ணா ஆகியோர், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20சதவீதம் ஒதுக்கீடு செய்தது தான் பிரச்சினையாக இருக்கிறது.

அதற்காக மொத்தமாக பணி நியமனங்களை செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது தவறான ஒன்றாகும். எனவே அந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டதோடு, இந்த மனு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2569 பணியிடங்களை நிரப்ப அனுமதி: உயர்நீதிமன்றம் வழங்கிய தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article