மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார்.
2019-ம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் , ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். தற்போது 43 வயதை எட்டியுள்ள தோனி விளையாடுவதை பார்க்க, அவர் ஆடும் மைதானங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் கடந்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ - சென்னை இடையிலான ஆட்டம் லக்னோவில் நடைபெற்றபோது தோனிய காண மைதானத்தை சிஎஸ்கே ரசிகர்கள் சூழ்ந்திருந்ததாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். மேலும் அவரை போன்ற கேப்டனை பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எம்.எஸ். தோனி போன்ற கேப்டனை நான் பார்த்ததில்லை. அவருடைய சிந்தனை, அணுகுமுறை ஆகியவை வித்தியாசமானது. இன்றைய நாளிலும் அவர் விளையாடுவதை பார்ப்பது அற்புதமானது.
பதிரனா அனுபவமில்லாத வேகப்பந்து வீச்சாளராக வந்தார். அவரை தோனி எங்கே பார்த்து கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. தற்போது அவரை தோனி மேட்ச் வின்னராக உருவாக்கியுள்ளார். அவருக்கு எப்படி தன்னுடைய வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும்.
தோனியிடம் பேசும் போதெல்லாம் அவரிடம் நான் எதையாவது கற்றுக் கொள்வேன். லக்னோவில் தோனி விளையாடும் போதெல்லாம் எங்கள் அணியின் ஜெர்சியை விட சிஎஸ்கே ஜெர்சிதான் மைதானத்தில் அதிகமாக தெரியும்.
எனக்கு கிரிக்கெட்டைப் பற்றி ஆர்வம் கொண்ட 11 வயது பேரன் இருக்கிறார். 5 - 6 வருடங்களுக்கு முன்பாக அவருக்கு கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி தோனி கற்றுக் கொடுத்தார். அவரிடம் அதிகப்படியான கேள்விகளை கேட்ட என்னுடைய பேரனிடம், 'அவரை விடு' என்று சொன்னேன்.
அதற்கு, 'குழந்தையை விடுங்கள் கேட்கட்டும். நான் இதை ரசிக்கிறேன்' என்று என்னிடம் தோனி கூறினார். பின்னர் குழந்தையிடம் தோனி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அதில் நீங்கள் மற்றவரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம். அதனாலேயே அவர் தோனியாக இருக்கிறார்" என்று கூறினார்.