மும்பை,
சமீப காலங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மகேந்திரசிங் தோனி வாழ்க்கை சினிமா படமாக வந்தது. சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக வெளியிட்டனர். பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் வாழ்க்கையும் படமானது.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கங்குலியும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குநர் விக்ரமாதித்ய மோட்வானே இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
கங்குலியின் சிறுவயது வாழ்க்கை முதல் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டது வரை உள்ள சம்பவங்கள் படத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குலி வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.