பத்ம பூஷண் விருது: நடிகர் அஜித்குமாருக்கு எல்.முருகன் வாழ்த்து

22 hours ago 1

சென்னை,

கலை, அறிவியல், இலக்கியம், வர்த்தகம், மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பாரத ரத்னா விருதுக்கு அடுத்த நிலையிலான இந்த உயரிய விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி 2025-ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 139 விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 23 பேர் பெண்கள். 10 பேர் வெளிநாட்டினர். 13 பேருக்கு அவர்களது மரணத்துக்கு பிறகு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்ம பூஷண் விருதுகள் தமிழ்நாட்டில் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா மற்றும் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர நடிகர் பாலகிருஷ்ணா, முன்னாள் சபாநாயகர் மனோகர் ஜோஷி உள்பட 19 பேர் இந்த விருதை பெறுகிறார்கள்.

இந்த நிலையில், 'பத்ம பூஷண்' விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு மத்திய மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கலைத் துறையில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகிற உயரிய விருதுகளில் ஒன்றான, 'பத்ம பூஷண்' விருது பெறுகிற, தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது தனித்திறன் கொண்ட நடிப்புத் திறமையால், தமிழக குடும்பங்களில் தனக்கென்று தனித்த இடம் பெற்றுள்ள அஜித்குமாருக்கு, இவ்விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவருக்கு பிடித்த கார் ரேசிலும் அவர் மேலும் பல விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article