
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை அணியின் சீனியர் வீரரான தோனி நேற்றைய ஆட்டத்துடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. நேற்றைய ஆட்டத்தை காண தோனியின் பெற்றோர் சென்னைக்கு வருகை தந்தனர்.
இதன் காரணமாக அவர் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், போட்டி முடிந்த பின்னர் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து முக்கிய தகவலை சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவரோடு இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் இன்னும் வலுவாக இருக்கிறார். அதனால் இப்போதெல்லாம் தோனியின் ஓய்வு குறித்த முடிவுகளை நான் கேட்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.