
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் 104 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுனில் நரைன் 44 ரன்கள் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி 72 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த நிலையில் கேப்டன் தோனி பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அவராலும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு ரன்னில் சுனில் நரைனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். உடனே நடுவரின் முடிவை எதிர்த்து உடனே டி.ஆர்.எஸ். அப்பீல் செய்தார். ரீப்ளேயில் அவருடைய பேட்டில் பந்து லேசாக உரசுவது போல தெரிந்தது. இருப்பினும் 3வது நடுவர் அவுட் என்றே தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் ஒருவேளை இந்த ஆட்டத்தில் தோனி முழுவதுமாக விளையாடி இருந்தால் போட்டி முடிவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்குமா? என்று வர்ணனையில் ஈடுபட்டிருந்த இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கிடம் போட்டி முடிந்த பின் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சேவாக், "நான் அப்படி நினைக்கவில்லை. தோனி அவுட் ஆகவில்லை என்றால், அவர்கள் அதிகபட்சமாக 130 ரன்கள் எடுத்திருக்க முடியும். கொல்கத்தா இந்த இலக்கை (104 ரன்கள்) 10.1 ஓவர்களில் துரத்தியது. இதற்கு பதிலாக நாம் கொஞ்சம் தாமதமாக இரவு 11:30 மணிக்கு நேரலைக்கு வருவோம். அதுதான் ஒரே வித்தியாசம்" என்று கிண்டலாக கூறினார்.