*விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனை
தோகைமலை : தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் புதிய ரகமான பருத்தி கோ 17 என்ற ரகத்தில் சாகுபடி செய்தால் அதிகமான மகசூல் பெற்று நல்ல லாபம் பெறலாம்.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தற்போது பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பல்வேறு ரகங்களில் உள்ள பருத்தியில் தற்போது பருத்தி 17 என்ற ரகத்தில் சாகுபடி செய்தால் அதிகமான மகசூல் பெற்று நல்ல லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் பருத்தி ஆராய்ச்சி நிலையம் வெளியிடப்பட்டு உள்ள புதிய ரகமான பருத்தி கோ 17 சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் பருத்தி பிளஸ் நுண்ணுட்டம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ, இயற்கை இடுப் பொருட்களான பஞ்சவாவ்யா, மீன் அமிலம் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி வழங்கப்பட்டு சாகுபடி செய்த வயலில் பயிர்களுக்கு ஊட்டமாக அளிக்கப்பட்ட வேண்டும்.
இந்த வயலில் பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்த விளக்கு பொறி, மஞ்சள் வண்ண அட்டை மூலம் பூச்சிகளை தடுக்கலாம். இதன் விளைவாக சாகுபடி செய்யப்பட்டு உள்ள பருத்தி கோ 17 ரகமானது நல்ல வளர்ச்சியுடன், சத்துப் பற்றாக்குறை இல்லாமல், குறைவான பூச்சி, குறைவான நோய் தாக்குதலுடன் ஒவ்வொரு செடிக்கும் அதிக பூக்கள் திறனுடன் இருப்பதோடு, பூக்கள் உதிர்வது இல்லாமல் சிறப்பாக இருக்கும்.
தற்போது பருத்தி சாகுபடியில் மிகவும் அதிகப்படியான வீரிய ஒட்டு ரகங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் வீரிய ஒட்டு ரகத்திற்கு கூடுதலான ஊட்டச் சத்துகள் தேவைப்படுவதோடு, அதிகமான பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகிது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அதிக வீரியம் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் பூஞ்சானக் கொல்லிகள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, விவசாயத்திற்க்கு நன்மை செய்யக்கூடிய பூச்சிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இவற்றை சரி செய்வதற்கு அதிக மகசூல் மற்றும் பூச்சி நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தர்வு செய்து, இயற்கை முறை நுண்ணூட்டம் மற்றும் இயற்கை முறை பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த பருத்தி கோ 17 என்ற ரகமானது 125 நாட்கள் முதல் 130 நாட்களுக்குள் மகசூல் பெறக்கூடிய குறைந்த வயது உடையதாகும். மேலும் இந்த ரகம் அடர் நடவு முறைக்கு ஏற்றதாகவும் உள்ளது.
ஏற்கனவே விவசாயிகள் நடைமுறையில் உள்ள ரகத்தை காட்டிலும் 18 சதவிதம் கூடுதலாக மகசூல் தரக்கூடியது. இதேபோல் பருத்தியை தாக்கக்கூடிய முக்கிய பூச்சிகளுக்கு குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. ஆகவே மேற்படி முறைகளில் புதிய ரகமான பருத்தி கோ 17 என்ற ரகத்தில் சாகுபடி செய்தால் அதிகமான மகசூல் பெற்று நல்ல லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.
The post தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பருத்தி சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம் appeared first on Dinakaran.