தொழில் வணிகத்துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 50 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 week ago 2

சென்னை: தொழில் வணிகத் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன.

தொழில் வணிகத் துறை வாயிலாக கலைஞர் கைவினைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற பல்வேறு சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 19 இளநிலை உதவியாளர், 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 50 பேருக்கு பணிநியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 1 உதவி கண்காணிப்பாளர். 11 உதவி இயக்குநர்கள் 18 உதவி பொறியாளர்கள் 47 உதவியாளர்கள், 34 இளநிலை உதவியாளர்கள், 41 தட்டச்சர்கள் மற்றும் 25 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 177 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தொழில் வணிகத்துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 50 பேருக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article