கோவை அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

5 hours ago 4

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபா காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சாய்பாபா காலனி அடுத்த கவுண்டம்பாளையம் எரு கம்பெனி பாலம் அருகே இன்று காலை நல்லாம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் ஜோதிராஜ் என்பவர் தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரில் இருந்து பெட்ரோல் கசிந்ததால், சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அவரிடம் பெட்ரோல் கசிவதாக கூறியுள்ளனர். இதனை அவர் பெட்ரோல் தீர்ந்துவிட்டது என்று எண்ணி காஸ் இணைப்புக்கு மாற்றியுள்ளார். அடுத்த சில நிமிடத்தில் திடீரென காரின் முன் பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதிராஜ் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். அதன் பின்னர் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கார் எரிந்து சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கோவை அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் appeared first on Dinakaran.

Read Entire Article